4. ஆரிய இனம், ஆரிய மொழியாக மாறிய கதை
ஆங்கிலேயர்கள் காலனி ஆதிக்கம் செய்தபொழுது, மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய கிராக்கி இருந்தது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் ஐரோப்பிய மொழிகள் ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்த நேரம் அது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானிய மொழி, செக் மொழி, ரஷ்ய மொழி இவையெல்லாம் ஒரே மொழிப் பிரிவைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்கள் பல நாடுகளைத் தாங்கள் காலனிகளாக மாற்றிக் கொண்டிருக்கையில், இந்த மொழி ஆராய்ச்சியாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். மொழி ஆர்வம் கொண்ட அவர்கள் ஆங்காங்கு உள்ள லோக்கல் மொழியைக் கற்றுக் கொண்டு ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருந்தனர்.
இங்கு ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் மிஷனரிகளாகவும் இருந்தனர். அல்லது மொழி ஆராய்ச்சியாளர்களை மிஷனரி வேலைக்குப் பயன் படுத்தினர். இவர்கள் அந்தந்த வட்டார மொழியையும் கற்றுக் கொண்டனர். அங்கு இருந்த மத நம்பிக்கைகளையும் தெரிந்து கொண்டனர். தெரிந்து கொண்டு அதைக் கிறிஸ்துவத்தில் புகுத்தி தாங்கள் கிறிஸ்துவம்தான் முதன்மையானது என்று மூளைச் சலவை செய்து மதம் மாற்றினர். அப்படி செய்து பலன் கண்டவர் முன்னரே சொன்ன நொபிலி என்பவர். இவர் தமிழ் வளர்த்த மதுரையில் உட்கார்ந்து, உங்கள் இந்துமதம் தான் எங்கள கிறிஸ்துவமும் என்று சொல்லி வேலையைக் காண்பித்தார்.
இவரைப் போலவே மற்ற மொழி ஆராய்சியாளர்களும், தாங்கள் வேலையை மொழியுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. நம் மதத்தை ஊடுருவி, நம் சரித்திரத்தையே மறக்கடித்து விட்டனர். அவர்கள் மாற்றி எழுதின சரித்திரத்தைத்தான் நாம் பாடமாகப் படிக்க வைத்தனர். இந்து மதத்தில் ஆழமாக வேரூன்றி இருந்த மக்களை, ஆங்கிலேயனுக்கு அடி வருடியாக மாற்றச் செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு ஆங்கிலக் கல்வி கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் கல்வியின் மூலம் இந்தியர்களை தங்கள் ரசனை, எண்ணம், கோட்பாடுகள், அறிவு என்ற வகைகளில் ஆங்கிலேயர்களைப் போல மாற்ற வேண்டும் என்பதையே கல்விக் கொள்கையாக மெக்காலே கொண்டிருந்தார்.
மெக்காலே
*இந்தியாவில் பிரிட்டிஷாரின் கல்விக்கொள்கையை அமல் செய்த மெக்காலே, பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 1835 பிப் -2 -இல் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார்.அதில் அவர்." நான் குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன்.இதுவரை ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ நான் பார்க்கவில்லை.அவ்வளவு வளம் நிறைந்தது அந்நாடு.கலாச்சாரம் மற்றும் ஆன்மீகநெறி எனும் முதுகெலும்பை உடைக்காதவரை நல்ல ஒழுக்கம், நல்ல பண்பு இருக்கும் அந்நாட்டின் மக்களை நாம் எப்போதும் வெற்றி பெறுவது கடினம்.ஆகவே, பழைய கல்வி அமைப்பு, கலாச்சாரம் ஆகியவற்றை மாற்றி, தங்களைவிட வெளிநாடு மற்றும் ஆங்கிலம் ஆகியனதான் உயர்வானது என்பதை மனதில் புகுத்துவதன் மூலம், தங்களைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டையும், பாரம்பரிய கலாச்சாரத்தையும் இழக்கும் படியான கல்வித் திட்டத்தை நான் பரிந்துரைக்கிறேன்.அதன் மூலம் நாம் எது போன்று அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுபோல் ஆதிக்கத்துக்குட்பட்டவர்களாக அவர்கள் மாறுவார்கள் " என்றார்.
அப்படி அவர் சொல்லி பதினைத்து வருடங்களாக ஒன்றும் உருப்படியாகச் செய்ய முடியவில்லை. அப்பொழுதுதான் அவர் கண்ணில் பட்டார் மாக்ஸ் முல்லர் என்னும் ஜெர்மானியர்.
முல்லர் பிறப்பால் ஜெர்மானியர். அவர் வேலை பார்த்ததோ இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில். அவர் சம்ஸ்க்ருதம் அறிந்த மொழி ஆராய்ச்சியாளர். மெக்காலே அவரைப் பிடித்தார். மெக்காலேயின் குறிக்கோளை முல்லர் நன்றாகப் புரிந்து கொண்டார். இந்தியர்களது மதமான இந்து மதம் அவர்களை இயக்குகிறது. அதன் பிடியிலிருந்து அவர்கள் வெளியே வந்தால் அவர்களை அடக்குவது சுலபம். இந்தக் கருத்தை தன் மனைவிக்கு 1866 -ஆம் வருடம் எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார். 'ரிக் வேதம் தான் இந்தியர்கள் மதத்தின் ஆதாரம். அந்த ரிக் வேதத்திற்கு ஆதாரம் எது என்று நாம் காண்பிக்க வேண்டும். அப்படி காண்பித்தால்தான் மூவாயிரம் வருடங்களாக அவர்களைத் தன் பிடியில் வைத்திருந்த அந்த மதத்தை வேரோடு பிடுங்க முடியும் என்று நான் நிச்சயமாக எண்ணுகிறேன்" என்று எழுதினார்.
(“The translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, I feel sure, is the only way of uprooting all that has sprung from it during the last 3000 years”
Source:- Müller, Georgina, The Life and Letters of Right Honorable Friedrich Max Müller, 2 vols. London: Longman, 1902.)
மாக்ஸ் முல்லர்
அந்த ரிக் வேதத்திற்கு ஆதாரம் என்று அவர் கண்டு பிடித்து சொன்னது ஆரியப் படைஎடுப்பு. படையெடுத்து வந்த ஆரியர்கள் கொடுத்ததுதான் வேதமும், வேத மதமும் என்றார் அவர். ஆரியர்கள் எப்படியெல்லாம் இங்கிருந்த மக்களை அழித்தார்கள் என்று விளக்குகிறது ரிக் வேதம் என்று சொல்லி, ஞான வழியாக விளங்கிய வேதத்தையும், இந்து மதத்தையும் கொச்சைப் படுத்தினார். இந்தக் கருத்து மொழி ஆராய்ச்சியாக மட்டுமல்ல, மிஷனரி பிரசாரமாகவும் ஆனது. இதன் மூலம் மக்களுக்கு இந்து மதத்தின் மீது இருந்த பற்றை அழிக்கப் பார்த்தனர். அது மட்டுமல்ல, ஆரியர் விரட்டிய மக்கள் திராவிடர்கள் என்றும் கூறி, இன்றைய இந்தியாவில் இருக்கும் மக்களை ஆரியர்- திராவிடர் என்று பிரித்து ஒரு பகைமை உணர்ச்சியை மூட்டப் பார்த்தனர். ஆங்கிலேயனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஆரிய- திராவிடப் பகை உரமானது.
ஆக, மொழி ஆராய்ச்சி என்ற பெயரில், நம் மதத்தை அழித்து, கிறிஸ்துவத்திற்கு மத மாற்றம் செய்வதற்கும், ஆங்கிலேயக் கூலிகளாக நம் மாறுவதற்குமே மாக்ஸ் முல்லர் பாடுபட்டார். இது சரித்திரம் சொல்லும் செய்தி. அப்படி அவர் சொன்னதை நம்பி, ஆரியப் படையெடுப்பில் ஓடி வந்த திராவிடன் நாம் என்று சொல்லித் திரிவது தமிழனுக்கு மானக் கேடு.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆரியன் வந்தான். வட இந்தியாவில் இருந்த தாச்யுக்களை விரட்டினான். வந்த இடத்தில் உட்கார்ந்து விட்டான். ஆக்கிரமிப்பாளனாக வந்த ஆரியன் கங்கைக் கரையில் உட்கார்ந்ததும் அமைதியாளனாக ஆகிவிட்டான். வேதம் படைத்தான். இந்து மதத்தைத் தோற்றுவித்தான் என்று அவர் எழுப்பிய கதையில், இந்தியர்கள் மயங்கினார்களோ இல்லையோ, ஐரோப்பியர்கள் மயங்கிவிட்டார்கள். தாங்கள் மூலத்தைத் தேடிக் கொண்டிருந்த அவர்கள் தாங்களே ஆரியர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த நம்பிக்கை தந்த எழுச்சியில் துண்டு பட்டிருந்த ஜெர்மனி ஒருங்கிணைந்தது.
1871 -இல் ஜெர்மனி ஒரு ஒருங்கிணைந்த பேரரசாக அறிவித்துக் கொண்டது. தங்களை 'ஆரிய நாடாக' பிரகடனப்படுத்திக் கொண்டது. இதைப் பார்த்த பிரிட்டிஷ் அரசுக்குக் கிலி பிடித்துக் கொண்டது. இவர்கள் சொன்ன கதை இந்திய மக்களைக் கவர்வதற்காக. ஆனால் அதன் எதிரொலி அவர்கள் எதிரி முகாமில் கேட்கிறது. தாங்களே உயர்ந்தவர்கள் என்ற ஆரிய இன வெறியுடன் கூடிய ஜெர்மனி, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது.
மேலும் அந்த நேரத்தில்தான் இந்தியாவிலும் சுதந்திரப் போராட்டம் தலை தூக்கியது. 1857 - ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போராட்டம் ஆங்கிலேயனைக் கவலையில் ஆழ்த்தியது. ஆரிய இனக் கொள்கையைக் கொண்டு இங்கு கதை பரப்பிக் கொண்டிருக்கையில், அங்கே, ஜெர்மனி தான் ஆரிய நாடு என்று சொல்லிக் கொண்டதும் அபத்தமாக இருந்தது.
பார்த்தார்கள், எந்த ஜெர்மானியரான முல்லர் ஆரிய இனக் கொள்கையைப் பரப்பினாரோ, அவரைக் கொண்டே அந்தக் கருத்தை மறுக்கச் செய்தார்கள். முல்லரைப் பொறுத்தவரை, அவருக்கு சம்பளம் கொடுத்து சோறு போட்டவன் ஆங்கிலேயன். அவனுக்கு விசுவாசமாக் நடந்து கொள்ள வேண்டும். அதனால் ஆரிய இனம் என்று பறை சாற்றியதை, ஆரிய மொழி என்று திருத்திக் கொண்டார். ஆரிய நாடாகத் தன்னை ஜெர்மனி அறிவித்துக்கொண்ட சில மாதங்களில், ஜெர்மானிய ஆதிக்கத்தில் அப்போது இருந்த பிரெஞ்சுப் பகுதியில் இருந்த ஸ்டிராஸ்பெர்க் பல்கலைக் கழகத்தில் முதல் முறையாக ஆரிய இனக் கொள்கையை மறுத்தார். பிறகு, இந்த 'ஆரிய ரிஷி' தன் புது கொள்கையை விடாமல் பற்றிக் கொண்டார்.
அதாவது. ஆரியன் என்று ஒரு இனமே இல்லை. அதுவரை அவர் சொன்னதெல்லாம் ஆரிய மொழியைப் பற்றியது. ஐரோப்பிய மொழிகளுக்கும், சமஸ்க்ருதத்துக்கும் ஒற்றுமை உள்ளது. எனவே இம் மொழிகளை ஐரோப்பிய அல்லது ஆரியக் குடும்ப மொழிகள் என்று சொல்லலாம் என்று பல்டி அடித்தார். அவர் சொன்ன வசனம் சூப்பர் வசனம். ஆரிய இனம், ஆரிய ரத்தம், ஆரிய முடி, ஆரியக் கண் என்றெல்லாம் சொன்னால் அது பாபம். அது லோட்டாத் தலையன் அகராதி, சொம்புத் தலையன் இலக்கணம் என்று ஆளை ஒரு அடையாளமிட்டுச் சொல்வது போல ஆகும். ஆரியம் என்பது ஆள் அடையாளம் இல்லை. அது மொழி அடையாளம் என்றார்.
("I have declared again and again that if I say Aryas, I mean neither blood nor bones, nor hair, nor skull; I mean simply those who speak an Aryan language...to me an ethnologist who speaks of Aryan race, Aryan blood, Aryan eyes and hair, is as great a sinner as a linguist who speaks of a dolichocephalic dictionary or a brachycephalic grammar.")
இப்படிஎல்லாம் சொன்னாலும் ஜெர்மனி தாங்கள் உயர்ந்த ஆரிய இனம் என்று சொல்லிக் கொண்டதை மாற்ற முடியவில்லை. உலகப் போர் வந்து ஹிட்லர் அழிந்து, ஜெர்மனி அடங்கிய பிறகுதான், ஐரோப்பிய உலகமே இந்த இனக் கொள்கையில் வாயை மூடிக் கொண்டது.
அப்படியும் ஆரிய இன வாதத்தைத் தங்களுக்கு வசதியாக இருக்கும் போதெல்லாம் ஆங்கிலேயன் சொல்லிக் கொண்டு நம்மை ஆண்டு வந்தான். இப்படித்தான் ஆரிய இன வாதமும், ஆரியப் படையெடுப்பும் அரசியல் ஆதிக்கத்துக்கு உதவியாக ஏற்படுத்தப்பட்டன. இதில் முளைத்த திராவிட இன வாதம் இன்றைய ஆதிக்க சக்திகளுக்கு ஊறுகாயாக உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.