3. மத மாற்றத்துக்கு உதவிய ஆரியக் கருத்து.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சரித்திரம் உண்டு. அங்குள்ள மக்கள் எப்பொழுதிலிருந்து அங்கிருக்கிறார்கள், எப்படி வாழந்தார்கள், அவர்கள் கலாச்சாரம் என்ன என்று தெரிந்துகொள்ள எல்லோருக்குமே ஆர்வமாகத் தான் இருக்கும். பாரத மக்களான நமக்கு ஒரு சரித்திரம் இருக்கிறது. நம்முடைய சரித்திரத்தைப் பற்றித் தெரிவிக்கும் நூல்களும் கதைகளும் நிறையவே உள்ளன. ரிஷிகள் எழுதிவைத்த புராணங்கள், இராமாயண, மகா பாரதம் போன்றவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நமது சரித்திரத்தைப் பற்றிச் சொல்லுகின்றன. பாரத நாட்டின் ஒரு அங்கமான தமிழர்களாகிய நமது சரித்திரமும் தமிழ் நூல்கள் மூலம் தெரிகிறது. இது பாரத நாட்டுக்கே உரிய ஒரு பிளஸ் பாயிண்ட்.
இந்த மாதிரி பழமையான சரித்திரம் ஆங்கிலேயனுக்கும், ஐரோப்பியனுக்கும் இல்லை என்பதுதான் நமக்கு துரதிஷ்டமாகிப் போய் விட்டது. அவர்கள் சரித்திரத்தைத் தேடப் போக, நமது சரித்திரத்தை மாற்றி விட்டார்கள். அதன் பெயர்தான் ஆரியப் படையெடுப்பும், ஆரிய - திராவிடச் சண்டையும்.
ஐரோப்பாவில் உள்ள நாடுகள் தனித் தனியாக இருந்தாலும், அங்கு பேசப்படும் மொழிகள் வேறு வேறாக இருந்தாலும், அந்த நாடுகளின் கலாச்சாரம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தது. அந்த மொழிகளுக்குள்ளும் நிறைய ஒற்றுமை இருந்தது. அந்த மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி போல கிரேக்க, லத்தீன் மொழிகள் இருந்தன. எனவே அந்த நாட்டு மக்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட இனத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்று அவர்கள் நம்பினார்கள். தொழில் புரட்சியும், விஞ்ஞான வளர்ச்சியும் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த நேரம் அது. தங்களை மிஞ்சி யாரும் இல்லை. தாங்களே உயர்ந்த இன மக்கள் என்று அவர்கள் பெருமைப் பட்டுக் கொண்டிருந்த காலம் அது.
அப்பொழுதுதான் இந்தியாவில் ஆங்கிலேயர் கால் பதித்துக் கொண்டிருந்தார்கள். நம் கலாசாரம், குறிப்பாக வேத மொழியான சமஸ்க்ருத மொழியைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள நேர்ந்தது. அதிலும் சமஸ்க்ருத மொழி, அதன் அமைப்பு, இலக்கணம், அதிலிருந்த நூல்கள் ஆகியவை அவர்களை ஆச்சரியமும், அதிர்ச்சியும் கொள்ள வைத்தன. அவ்வளவு சிறப்பான மொழியாக சம்ஸ்க்ருதம் இருந்தது. மேலும் தாங்கள் உயர்வாக நினைத்த கிரேக்க லத்தீன் மொழிகளை ஒத்தும் இருந்தது. அவற்றுக்கு மேலாகவே சிறப்பாகவும் இருந்தது என்பதை அவர்கள் கண்டனர். அங்குதான் 'ஆரிய' எண்ணம் ஆரம்பமானது.
ரிக் வேதத்தில் மட்டும் 36 இடங்களில் ஆரியன் என்ற வார்த்தை வருகிறது. ஆரியன் என்பது உயர்ந்தவன் என்ற பொருளில் வருகிறது. மேலும் ஆங்காங்கே இந்திரனைப் பற்றியும், அவன் 'தாஸ்யு' என்பவர்களை அழிப்பதைப் பற்றியும் ரிக் வேதத்தில் வருகிறது. பார்த்தார்கள் இந்த ஐரோப்பியர்கள். இந்த சமஸ்க்ருதமோ நம் தாய் மொழியான லத்தீனுக்கும் தாய் மொழி போல இருக்கிறது. நாம்தான் உருவத்திலும், நிறத்திலும், கலாச்சாரத்திலும் உயர்ந்தவர்கள். இந்த இந்தியர்களோ, சாதாரணர்கள், நிறம் குறைந்தவர்கள், எவன் படையெடுத்து வந்தாலும் அடி வாங்கி, அடங்கிப் போகிறவர்கள். முஸ்லீம் படையெடுப்பில் ஒடுங்கிப் போனவர்கள், இப்பொழுது ஆங்கிலேயர்களிடத்தில் அடங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்படி ஒரு உயர்ந்த இனமாக இருக்க முடியும்? இவர்களிடையே இருக்கும் உயர்ந்த மொழியான சம்ஸ்க்ருதம் எப்படி இவர்களுக்குக் கிடைத்திருக்கும் - என்றெல்லாம் நினைத்தான் ஆங்கிலேயன்.
அதன் விளைவு, ஆரியப் படையெடுப்பு என்னும் சரித்திரத்தை அவன் கண்டு பிடித்தான். என்றோ தம் முன்னோர்தான் இந்த இந்தியாவை அடைந்திருக்க வேண்டும். அவர்கள்தாம் இந்திரன் போன்ற உயர் தெய்வங்களாக் இருந்திருக்க வேண்டும். அவர்கள் பேசிய மொழிதான் சம்ஸ்க்ருதம். அவர்கள் இங்கிருந்த மக்களை (தாச்யுக்கள் ) விரட்டி விட்டு, தாங்கள் இங்கு குடியேறி இருக்க வேண்டும். அதன்பின் அவர்கள் கொடுத்ததுதான் வேதமும் மற்ற சம்ஸ்க்ருத நூல்களும், என்று தாங்கள் ஜோடித்த கதையைப் பரப்ப ஆரம்பித்தார்கள்.
இந்தக் கதை அவர்களுக்கு மிகவும் தேவையாகவும் இருந்தது. ஏனென்றால், சிறிது சிறிதாக ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆக்கிரமிக்க ஆரம்பித்த போது, கூடவே கிறிஸ்துவ மிஷனரிகளையும் அழைத்து வந்தார்கள். பாடம் சொல்லிக் கொடுக்கிறேன், வைத்தியம் பார்க்கிறேன் என்று அவர்கள் மக்களிடையே ஊடுருவி, ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம் என்கிற மாதிரி, தாங்கள் கிறிஸ்துவக் கொள்கைகளையும் கூடவே பரப்பினார்கள்.
முதலில் மக்கள் கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எப்பேர்பட்ட உயர்ந்த மதம் இந்து மதம். அதன் பாரம்பரியம்தான் எவ்வளவு பழமையானது. அதை விட்டு விட்டு கிறிஸ்துவத்துக்கு மாறுவதா? கிறிஸ்து பிறந்தது இதோ, திரும்பி பார்த்தால் இருக்கும் சில நூற்ற்றண்டுகளுக்கு முன்புதான். ஆனால் இந்து மதத்தின் கடவுளான கிருஷ்ணன் பிறந்தது என்றைக்கோ. ராமன் வாழ்ந்தது அவருக்கும் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னால், என்று தாங்கள் சரித்திரம், பழமை, பாரம்பரியம் எல்லாம் புரிந்து கொண்டு மக்கள் அசரவில்லை.
அந்த சமயத்தில் ஹிந்துக்களாக இருந்த இந்தியர்களை முதன் முதலில் வசப்படுத்தியவர் ஒரு இத்தாலியர்!!
இந்து மதத்தை ஊடுருவி, கிருஸ்துவ மதத்திற்கு ஹிந்து மதச் சாயல் கொடுத்து, முதன் முதலில் மக்களை வசப்படுத்தி வெற்றி கண்ட இந்த இத்தாலியர் ராபர்ட் டே நொபிலி என்னும் கிறிஸ்துவ மிஷனரி ஆவார். இவர் காலம் 1577 - 1656. தனது இருபத்து எட்டாம் வயதில் கோவாவுக்கு வந்த இவர், அங்கிருந்து கொச்சின் சென்று, பிறகு தமிழரின் கோட்டையாம் மதுரையில் டென்ட் அடித்து உட்கார்ந்து விட்டார். சமஸ்க்ருததையும், தமிழையும் கற்றார். வடமொழி வேதத்தைப் படித்தார். அத்துடன் இந்து மதப் பழக்கங்களை கிருஸ்துவத்தில் புகுத்திக் கொண்டார். அதுமட்டுமல்ல தானே ஒரு ஹிந்து சந்நியாசி போல நடை உடை பாவனையை அமைத்துக் கொண்டார்.
நொபிலி
பைபிளை வேதம் என்றார். சர்ச்சை, கோவில் என்றார். பாதிரியாரை குரு என்றார். அருள், பிரசாதம் போன்ற ஹிந்து மதச் சொற்களைக் கிருஸ்துவத்தில் புகுத்தினார். அத்துடன் நிற்காமல் கிறிஸ்துவம்தான் உண்மையான வேத மதம் என்று ஓத ஆரம்பித்தார். இப்படி கிறிஸ்தவத்தின் முகப்பை மாற்றுவது தவறு என்று இவர் மீது குற்றச்சாட்டு எழுந்து அது அன்றைய போப்பாண்டவர் கிரிகோரி அவர்கள் முன் வைக்கப்பட்டது. விசாரித்த அவர் இந்த உத்திகளை ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், அன்றைக்கு ஹிந்துக்கள் அணிந்து வந்த பூணூல், நெற்றியில் சந்தனம் இடும் வழக்கம், ஸ்நானம் செய்தல் போன்றவற்றையும், மூட நம்பிக்கை என்றில்லாத அளவில் இந்தியக் கிருஸ்துவத்தில் அனுமதித்தார்.
இவற்றை எல்லாம் விட இவர்கள் செய்த முக்கியச் செயல், ஹிந்துக்களுக்குள் இருந்த பல பிரிவுகளுக்குள் பேதம் காட்டி, அதை நீக்குவதாகச் சொல்லி, தங்கள் மதத்தில் சேரச் செய்ததுதான். இவன் பறையன், இவன் கீழ் ஜாதி, இவனை அவன் சரியாக நடத்தவில்லை என்று சொல்லி, அவற்றை நீக்குவதாகச் சொல்லி கிறிஸ்துவத்துக்கு மதம் மாறச் செய்தனர்.
ஆரியக் கருத்தைக் கண்டு பிடித்த பின் அவர்கள் சொல்லிக் கொண்டது என்னவென்றால், கிருஸ்துவ மதம்தான் ஒரிஜினல் ஆரியர்களால் எழுப்பப்பட்டது. இந்தியாவில் உள்ள மக்களும் ஆரியர்களே. ஆனால் அவர்கள் தங்கள் மூலம் ஐரோப்பாவில்தான் என்பதை மறந்து விட்டனர். அவர்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறுவது, தாங்கள் தாய் இனமான ஆரியத்துடன் இணைவதாகும் என்றெல்லாம் பேசி, மயக்கி, இந்துக்களை மதம் மாற்றினார்.
இந்தக் கொள்கை ஆங்கிலேய ஆட்சியாளர்களது மூல மந்திரமாயிற்று. இந்தியர்களாகிய நீங்கள் ஆரியர்கள்தான். உங்கள் முன்னோர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள். அவர்கள்தான் இங்கு வந்து இங்கிருந்த மக்களை விரட்டியடித்து, தங்களை ஸ்தாபித்துகொண்டனர். அவர்கள் கொடுத்ததுதான் வேதமும், இந்து மதமும். ஆனால் இன்றோ அவர்கள் சந்ததிகளாகிய நீங்கள் சீரழிந்து இருக்கிறீர்கள். ஐரோப்பாவில் தொடர்ந்து வாழ்ந்த நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். உங்களைத் தூக்கிவிடத்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். உங்களை ஆண்டு உங்களை உயர்த்த வந்தவர்கள் நாங்கள். இப்படி மிஷனரிகள் மட்டும் பேசவில்லை, ஆட்சியாளர்களும் பேசினார்கள். இந்தக் கருத்தையே பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1929 - ஆம் ஆண்டு அந்நாளைய பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஸ்டான்லி பால்ட்வின் என்பவர் அறை கூவலாக விடுத்தார். அந்த அளவுக்கு, ஆரியன் என்ற கொள்கையும் அந்த ஆரியன் ஐரோப்பியனே, அவன்தான் இந்தியாவை முதலில் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற கருத்தும் ஆங்கில ஆதிக்கத்திற்கு உரம் போட்டன.
ஸ்டான்லி பால்ட்வின்
ஆரியப் படைஎடுப்புக் கொள்கை ஆங்கிலேயனுக்கு வசதியாக இருந்த கொள்கை. காலனி ஆதிக்கம் செய்வதற்கும், இந்துக்களை மூலச் சலவை செய்து கிறிஸ்துவர்களாக மாற்றுவதற்கும் உதவியாக இருந்த ஒரு ஆயுதம். முதலில் தாங்கள் சரித்திரத்தைத் தேடினார்கள். அப்படித் தேடினதில் கிடைத்ததைக் கொண்டு லாபத்தைத் தேடினார்கள். ஆங்கிலேயன் வியாபாரி. அவன் சரித்திரம் கிடைத்ததோ இல்லையோ, நல்ல லாபம் கிடைத்தது. இந்தியர்களை அடிமைப்படுத்த வசதியாக இருந்தது. ஆனால் நாமோ நம் சரித்திரம் எது என்று தெரிந்தும், அவன் பேச்சில் மயங்கினோம். அவன் பொய்யை நம்பினோம். இன்று விஞ்ஞானமும், ஆராய்ச்சிகளும் அது கலப்படமில்லாத ஏமாற்று என்று தெரிவித்தும் இன்னும் முட்டாள்களாக இருக்கிறோம்.
ஆதிக்க சக்திகளாக இன்றைக்கு இருக்கும் தமிழக அரசியல்வாதிகள், இந்த ஏமாற்றுக் கதையை வைத்துக் கொண்டு நம்மை இன்றும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கின்றனர். இது இன்னும் எத்தனை நாள் நடக்கும்?
அந்த நாள் ஆதிக்க சக்தியான ஆங்கிலேயனையே இந்த ஆரிய- திராவிடக்கதை ஒரு காலக்கட்டத்தில் ஆட்டி வைத்து விட்டது. அது என்ன என்றுபார்ப்போம்.
THANKS TO :- JAYASHREE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.