திங்கள், 22 நவம்பர், 2010

"தமிழன் திராவிடனா?"

2. சங்கப் புலவர்கள் பொய்யர்களா?



பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை. தமிழன் எப்படிப்பட்டவன், அவன் எங்கு வாழ்ந்தான் என்றெல்லாம் சங்கப் புலவர்கள் நிறையவே சொல்லிவிட்டார்கள். அந்தப் புலவர்கள் பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. அவர்கள் தந்த பாடல்கள் இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கின்றன. அவர்கள் சொன்னது பொய் என்றால் அவர்கள் பெயரும், அவர்கள் தந்த தமிழும் இன்று வரை நிலைத்து நின்றிருக்குமா?

அவர்கள் தமிழன் திராவிடனே என்று ஒருக்காலும் சொல்லவில்லை. தமிழன் இப்படிப்பட்டவன், அவன் இப்படி வாழ்ந்தான், இந்த இடத்தில் வாழ்ந்தான், அவன் நடை, உடை பாவனை இப்படிப்பட்டவை என்பது பற்றி அவர்கள் சொன்னதெல்லாம், மற்ற ஆராய்சிகள் தரும் முடிவுகளோடு ஒத்துப் போகின்றன. நம் தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் பற்றிக் கிடைத்துள்ள கல் வெட்டுச் சான்றுகள், மற்றும் பலவித சான்றுகளுடன் ஒத்துப் போகின்றன. வழி வழியாக நம் நாட்டைப் பற்றி இருந்து வரும், சரித்திரம், புராணக் கதைகள், இதிகாசக் கதைகளுடனும் ஒத்துப் போகின்றன.

ஆனால் திராவிடக் கருத்து இவை எவற்றுடனும் ஒத்துப் போகவில்லை. பொய்யின் ஆயுசு புனையும் வரைதான். இன்று எல்லா ஆராய்ச்சியாளர்களும் திராவிடம் என்பது பொய், திராவிடன் என்று ஒரு இனமே இல்லை என்று அறிந்து, அதைக் கைவிட்டு விட்டார்கள்.

ஒரு ஆராய்ச்சி நடக்கிறது என்றால், அதிலும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி ஓரிடத்தில் நடக்கிறது என்றால் அது காட்டும் செய்திகள், அந்த இடம், அந்த செய்தி நடந்த காலம் ஆகியவை குறித்த மற்றைய ஆராய்சிகள், சான்றுகள் ஆகியவற்றுடன் ஒத்துப் போக வேண்டும். சிந்து சமவெளி மக்களே தமிழ் மக்கள், அவர்கள் அங்கிருந்து தமிழகம் வந்தனர் என்றால் அந்த செய்தி தமிழில் வழங்குகிற சான்றுகளுடன் ஒத்துப் போக வேண்டும்.

உதாரணத்திற்கு, கரூர் மியுசியத்திற்குக் கிடைத்துள்ள பழைய காசுகளில் ஒன்றைக் குறிப்பிடலாம். இது ஒரு செப்புக் காசு. இதன் ஒரு பக்கம் வில்லும் அம்பும் இருக்கிறது. மறு பக்கம் ஒரு வீரன் உருவம் இருக்கிறது. இந்தக் காசும், இதில் உள்ள வீரன் உருவமும் அந்த நாள் ரோம் நாட்டு காசுகளைப் போல உள்ளது. தமிழ் நாட்டில் கரூர்ப் பகுதியில் பழங்கால ரோமானிய காசுகள் நிறைய கிடைத்துள்ளன. தமிழகத்துக்கும் ரோமுக்கும் வர்த்தகத் தொடர்பு இருந்து வந்திருக்கிறது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. அதனால் இந்தக் காசு ரோம நாட்டுக் காசு என்றே முடிவு கட்ட இடமிருக்கிறது.

ஆனால் இந்தக் காசில் அந்த வீரன் உருவத்துக்குக் கீழே, தமிழ் பிராம்மி (அந்த நாள் தமிழ் எழுத்து) எழுத்தில் 'கொல்லிப் புறை" என்று எழுதி உள்ளது. இந்தக் காசு அச்சடிக்கப்பட்ட காலத்தை விஞ்ஞான முறையில் கண்டு பிடித்துள்ளார்கள். அதன்படி ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் காசை அச்ச்சடித்திருக்க வேண்டும். இந்தக் காசு கிடைத்த இடம் கொல்லி மலை என்னும் பகுதி. கொல்லிப் புறை என்று எழுதி இருப்பதால் கொல்லி மலை சம்பந்தமாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் புறை என்பது யாரைக் குறிக்கிறது?





இங்குதான் நம் சங்க இலக்கியங்கள் அருமையாக வழி காட்டுகின்றன. கொல்லி மலையைப் பற்றி 18 இடங்களில் சங்க நூல்கள் பேசுகின்றன. கொல்லியை ஆண்ட தலைவனாக வல்-வில் ஓரி என்னும் அரசனைப் பற்றி 7 இடங்களிலும், சேர அரசனைப் பற்றி 9 இடங்களிலும் சொல்லப்பட்டுள்ளன. இவர்களில் யார் இந்தக் காசை அச்சடித்திருப்பார்கள்? அல்லது வேறு ஒரு அரசர் இதை அச்ச்சடித்திருப்பாரா? அல்லது இந்தக் காசு ரோம் நாட்டுக் காசுதானா என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன. அதாவது ஒரு தொல் பொருள் பற்றிய ஆராய்ச்சி என்றால், பல கோணங்களிலிருந்தும் ஆராய வேண்டும்.

கொல்லி மலையின் அரசனான வல் வில் ஒரியைப் பற்றி, தமிழில் சங்க நூல்கள் சொல்கின்றன. அவன் சிறந்த வீரன், அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. அப்படிப்பட்டவனை திருக்கோவிலூர் மலையன் காரி என்பவன் போரில் வென்றான். அப்படி வென்று கிடைத்த கொல்லி மலையை, தன் நண்பனான சேர மன்னனான பெரும் சேரல் இரும்பொறைக்குத் தந்தான். பதிலுக்கு இந்த சேர மன்னன் காரியின் எதிரியான அதிகமானைத் தகடூரில் வென்றான். இவை எல்லாம் சங்க இலக்கியம் சொல்லும் செய்திகள்.ஆனாலும் இவற்றின் மூலம் கொல்லிப் புறை யாரைக் குறிக்கிறது என்னும் புதிர் விடுபடவில்லை.

இந்தப் புதிரை அவிழ்க்க மேலும் சில சான்றுகள் கிடைத்துள்ளன.
கரூர் அருகில் உள்ள புகலூர் மலைப் பகுதியிலும் ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. இதில் பெரும் சேரல் இரும்பொறையைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இந்த அரசன் பெயர், பொறையன் என்றும் புறையன் என்றும் இருவிதமாகவும் குறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தச் சேர மன்னனுக்கு புறை என்ற பெயரும் இருந்தது தெரிகிறது.

செப்புக் காசின் ஒரு புறம் சேர மன்னன் சின்னமான வில்-அம்பு இருப்பதாலும், மறுபுறம் கொல்லிப் புறை என்றும் இருப்பதாலும், இந்தக் காசை வெளியிட்ட அரசன் சேரன் தகடூர் எறிந்த கோப்பெரும் சேரல் இரும்பொறை என்று தெரிகிறது. ரோமானிய சாயல் இருப்பதால், ரோமானிய காசுகளை முன் மாதிரியாகக் கொண்டு சேரன் இந்தக் காசை வடித்திருக்கிறான் என்று தெரிகிறது. ஆனால் சங்கத் தமிழ் மூலம் ஓரி, காரி, இரும்பொறை பற்றி நாம் அறிந்திருக்கவில்லை என்றால் இந்தக் காசில் காணப்படும் எழுத்து ஒரு ரோமானிய அரசனைக் குறித்தது என்றே நாம் நினைத்திருப்போம். அது மட்டுமல்ல, தமிழ் பிராம்மி எழுத்தையே ரோமானியர்களும் பின் பற்றினர் என்றும் சொல்லிக் கொண்டிருப்போம். அந்த அடிப்படையில், திராவிட பிரமைக்குப் பதிலாக ரோமானிய பிரமை பிடித்து, தமிழன் ரோம் நகரிலிருந்து வந்தவன் என்றும் சொல்லிக் கொண்டிருக்கலாம்!


இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிந்து சமவெளி ஆராய்ச்சி காட்டும் செய்திகளை நம்மிடையே இருந்துவரும் இலக்கிய ஆதாரத்துடனும், கல்வெட்டு போன்ற பிற சான்றுகளுடனும் ஒப்பிட்டுத்தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. இந்த செப்புக் காசு சொல்லும் கதை, சங்க இலக்கியங்கள் சொல்லும் கதைகள் கற்பனைக் கதைகள் இல்லை என்று தெரிவிக்கிறது அவை அன்று நடந்த உண்மைச் சரித்திரத்தைத்தான் சொல்லுகின்றன. அவற்றைப்பாடிய சங்கப் புலவர்கள் ஹோட்டலில் ரூம் போட்டு, கிக் ஏற்றிக் கொண்டு கற்பனை செய்து பாடவில்லை. அவர்கள் பாடிய ஒவ்வொரு சொல்லும் உண்மையே என்றும் தெரிகிறது. அவர்கள் சொல்லும் எல்லாச் செய்தியும் உண்மை என்று மெய்ப்பிக்கும் பல ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.


அவர்கள் ஓரிடத்திலும், நாம் சிந்து நதிக் கரையிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லவில்லை. நம்மை வாழ வைத்த ஆறு காவேரி ஆறு, வைகை ஆறு என்று சொன்னார்களே தவிர சிந்து நதி நம்மை வாழ வைத்ததாகச் சொல்லவில்லை. நாம் திராவிடர்கள் என்று சொல்லவில்லை. இந்தத் திராவிடர்களை ஆரியர்கள் விரட்டி அடிக்கவே இவர்கள் புகலிடம் தேடி தற்போதைய தமிழகம் வந்தனர் என்று சொல்லவில்லை.
சிந்துநதி நம்மை வாழ வைத்த நதியாக இருந்திருந்தால், அதைப் பற்றி கனவு போலவாவது ஒரு பழம் கதையை புலவர்கள் எழுதி வைத்திருப்பார்கள். அப்படிச் செய்ய வில்லையே?

மாறாக, நம் வேர்கள் கடல் கொண்ட குமரியில் இருந்தது என்றுதானே சொல்லியிருக்கிறார்கள்? அங்கு இருந்த கன்னி ஆறு எனப்படும் குமரி ஆறு பற்றியும், பஹ்ருளி என்னும் ஆறு பற்றியும் தான் சொல்லியுள்ளார்கள்.

இன்று இந்தியப் பெரும் கடல் என்று இருக்கும் பகுதியில் தமிழ் நிலம் நீண்டு பரவியிருந்தது. அங்கே தென் பகுதியில் ஆண்டவன் பாண்டியன் என்பதால், அவன் தென்னவன் என்று அழைக்கப்பட்டான். அந்தத் தென்னவன் வளர்த்ததுதான் இந்தச் சங்கத் தமிழ். மூன்று முறை கடல் கோள் கண்டு அந்த நிலம் படிப்படியாக கடலுக்குள் மறைந்து விட்டது. அதில் எஞ்சியது தான் இன்றைய தமிழகம் என்பது சங்கத் தமிழ் கூறும் சரித்திரம். நாம் ஆராய்சியை மேற்கொள்ள வேண்டியது இந்தத் தென்கடல் பகுதியில்தான். வடக்கில் இல்லை. .
THANKS TO JAYASHREE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.