திங்கள், 22 நவம்பர், 2010

* தமிழன் திராவிடனா?"



தமிழ் நாட்டை ஒரு நோய் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இது பழைய நோய்தான். புதிதில்லை. என்றாலும் கொஞ்சம் தீவிரமாக இப்பொழுது பரவிக்கொண்டு வருகிறது. இதைச் "சந்திரமுகி நோய்" என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நல்ல வேளையாக இது அரசியல்வாதிகளின் மத்தியில்தான் அதிகம் காணப்படுகிறது. மக்களுக்குப் பரவினாற்போலத் தெரியவில்லை. ஆனால் அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால், அண்டை வீட்டுக் காரனுக்கு இரைச்சல் லாபம் என்பார்களே அதுபோல அரசியல்வாதிக்கு இந்த நோய் வந்துள்ளதால், மக்களுக்குத் தலைவலிதான் லாபமாக இருக்கிறது. அப்படி என்ன நோய் இது என்று கேட்கிறீகளா? தொந்திரவு பிடித்த இந்த நோயின் பெயர் 'திராவிட நோய்'! இதைதான் நான் சந்திரமுகி நோய் என்கிறேன்.


சந்திரமுகி நோய், கங்காவைப் பாடாகப் படுத்தியது. கங்காவை யாரால் மறக்க முடியும்? ஜோதிகாவின் ஆக்டிங்கில் கங்காவையும், சந்திரமுகியையும் மாறி மாறி நாமெல்லாம் பார்த்தது இன்னும் நினைவில் நிற்கிறது. கங்காவுக்குத் தான் யார் என்பது அவ்வபொழுது மறந்து விடும். சந்திரமுகியின் கொலுசைப் பார்த்தால் அது தான் போட்டு ஆடியது என்று நினைப்பாள். சந்திரமுகியின் உடையைப் பார்த்தால் அது தன்னுடையதுதான் என்று நினைப்பாள். சந்திரமுகி சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் தொடர்புபடுத்தி, தானே சந்திரமுகி என்று கங்கா நினைத்து விடுவாள். நினைப்பது மட்டுமில்லை, சந்திரமுகியைப் போலவே நடந்து கொள்ளவும் ஆரம்பித்து விட்டாள். இதுதான் சந்திரமுகி நோய்.


நாம் நாமாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நாமே இன்னொருத்தர் என்று கற்பனை செய்யக்கூடாது. நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை என்றால்தான் இப்படியெல்லாம் பிரமை வரும். தன்னையே இரண்டு வேறுவித மனிதனாகப் பார்க்கும் ஒருவித மனோ வியாதி இது.

இப்படிப்பட்ட ஒரு நோய்தான் இன்று திராவிடம் பேசும் தமிழ் நாட்டுத் தலைவர்களைப் பற்றியுள்ளது. நாம் தமிழர்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வளவு வருடங்களாக தமிழ், தமிழ் என்று தமிழைப் பற்றியே பேசி இருக்கிறார்கள். சங்கத் தமிழைக் கரைத்துக் குடித்தேன் என்றும் சொல்லி வருகிறார்கள். அந்த நாள் தமிழ் அரசர்கள் போல, தமிழ் வளரச் சங்கம் கூட்டுவோம் என்று மாநாடும் நடத்துகிறார்கள். கூடவே நாம் திராவிடர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஒரு தெலுங்கரைப் போய்க் கேளுங்கள், நீங்கள் திராவிடரா என்று, இல்லை என்பார். கேரளத்தவரைக் கேளுங்கள், கர்நாடகத்தில் இருப்பவரைக் கேளுங்கள். அவர்கள் எல்லாம் தாங்கள் திராவிடர் என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தஞ்சை மண்ணில் வந்தவர்களும், மதுரைத் தமிழைக் குடித்தவர்களும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களே? வேடிக்கையாக இல்லை?




நாம் தமிழர்தான் என்று நம் பழந்தமிழ் நூல்கள் சொல்கின்றன. நம் தாத்தா காலம் வரை திராவிடன் என்ற ஒரு வார்த்தையே அவர்களுக்குத் தெரியாது. சங்கத் தமிழ் நூல்களில் ஒரு இடத்திலாவது நம் நாடு திராவிட நாடு என்றும், தமிழ் பேசும் நாமெல்லாம் திராவிடர் என்றும் சொல்லப்படவில்லை. நமக்கு ஒரு திராவிட அடையாளம் இருந்திருந்தால் சங்கம் வளர்த்த நம் தமிழ் முன்னோர் அதைச் சொல்லாமல் விட்டிருப்பார்களா?



அரசியல்வாதிகள் தாங்கள் விரும்புகிறதைச் சொல்லிவிட்டுப் போவார்கள். இரட்டை மன நிலையில், சந்திரமுகி நோயில் சிக்கி, அவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்று நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் நம்மையுமல்லவா திராவிடர்கள் என்று நம்ப வைக்க முயலுகிறார்கள்? நாம் தமிழர்கள் இல்லையா? நம் பூர்வீகம் தெற்கு பாரதத்தில் இல்லையா? நம் பேசும் தமிழ் வாழ்ந்தது, வளர்ந்தது எல்லாம் தென்னவன் என்று போற்றப்படும் தென் பாண்டி அரசர்களது நிழலில் இல்லையா? இப்படித்தானே மலை மலையாகக் குவிந்திருக்கும் நம் பழந் தமிழ் நூல்கள் கூறுகின்றன?



அப்படியல்ல. நம் முன்னோர்கள் சிந்து சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள். அவர்களை ஆரியர்கள் விரட்டி விடவே தென் பகுதிக்கு வந்து விட்டார்கள் என்று சொன்னால் மறத்தமிழன் நம்பலாமா? தமிழர்களும், பாண்டியன் மூதாதையரும் பயந்து ஓடி வந்தவர்கள் என்று சொல்வது போல இருக்கிறதே? விரட்டி விட்டால் ஓடி வருகிறவனா பாண்டியன் (அல்லது அவன் முன்னோன்)? அவன் நின்று போர் புரிந்து, வந்தவனை ஒரு கை பார்க்காமலா போயிருப்பான்?



குறிப்பாக பாண்டியன் லேசுப் பட்டவனா? இன்றைக்கும் மதுரைக்காரனைப் பாருங்கள். திருவுக்கும், மங்கலத்துக்கும் பேர் போனவனான அவன் யாருக்காவது அஞ்சுகிறானா? யாராவது அவனை எதிர்த்துப் பேச முடியுமா? அப்படிப் பேசினால் பொசுக்கி விட மாட்டானா? அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும், பெயருக்காவது வடக்கில் உட்கார்ந்திருப்பானே தவிர, விரட்டி விட்டுவிட்டார்கள், அதனால் தெற்கிற்கு ஓடி வந்து விட்டேன் என்ற கதை பாண்டி நாட்டுத் தமிழர்களிடம் எடுபடாது.

விரட்டப்பட்டு ஒடக்கூடியவன் தமிழன் அல்லன் என்று சங்கத் தமிழ் நூல்களும் காட்டுகின்றன. ஒரு யானை எதிர்த்தால்கூட பயந்து ஓடி வராமல், அந்த யானையுடன் போரிட்டு அதை அடக்கி வருவான் மறத் தமிழன் என்று சங்க நூல் கூறுகிறது. அவனைப் பெற்ற தமிழ்ப் பெண்ணோ முறத்தால் புலியையே அடித்து விரட்டியவள். இன்று அவள் அடிப்பது கொசுவென்றாலும் அஞ்சாமையும், ஆற்றலும், துணிச்சலுடன் எதிர்த்து நிற்பதும் தமிழர்கள் ரத்தத்தில் வந்த பண்பு. அப்படிப்பட்ட தமிழனுக்கு ஏன் இந்த சந்திரமுகித்தனமான பிரமை?



இந்தப் பிரமைக்குக் காரணம், சிந்து சமவெளிப் பகுதியில் காணப்பட்ட சில பொருட்கள், மொழி பற்றிய ஆராய்ச்சிகள் முதலியன. அவற்றுக்கும் நமக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதால் அவர்கள்தான் நாம் என்று சந்திரமுகித்தனமாக நினைத்துவிடுகிறார்கள் இந்த நோயாளிகள். உண்மையில் அந்த மக்களது நாகரீகத்துக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்று அங்கு கிடைத்துள்ள சின்னங்கள் காட்டுகின்றன. சின்னங்கள் தவிர பிற காரணிகளும் தமிழன் அங்கிருந்து வந்தவன் இல்லை என்று காட்டுகின்றன. அது புரியாமலும், தமிழனின் மூலத்தை அறியாமலும், தங்களைப் பீடித்த நோயைப் பரப்ப முயலுகிறார்கள்.

கங்காவைக் குணப்படுத்த டாக்டர் சரவணன் வந்தார். அரசியல்வாதிகளைத் தாக்கியுள்ள இந்த சந்திரமுகி நோய் தமிழ் மக்களுக்குப் பரவாமல் இருக்க அந்த டாக்டர் சரவணன் தான் வர வேண்டும் போல இருக்கிறது. ஆனால் எப்பொழுது வருவார், எங்கே வருவார் என்று அவரைப்பற்றி அவருக்கே தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் வந்து விடுவேன் என்று சொல்லியிருக்கிறார். அப்படி அவர் வரவில்லை என்றாலும் டாக்டர் வசீகரனாக அவர் ஆகி விட்டார். நல்லது செய்யும் எந்திரனை அனுப்பி நோயைத் தீர்க்கலாம். அவரே வரலாம். வராமலும் போகலாம்.

ஆனால் இவர்கள் யாரையும் நம்ப முடியாது. நம்மை நாமேதான் காத்துக் கொள்ள வேண்டும். திராவிடப் பேச்சில் உள்ள ஓட்டைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏவுகிறவனுக்கு வாய்ச் சொல், செய்கிறவனுக்கு தலைச் சுமை என்பதைப் போல அரசியல்வாதிகள் வாய்ச் சொல் கேட்டு, தமிழ் மக்களாகிய நாம் தலைவலி அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டாம். தமிழன் விரட்டப்பட்டு வரவில்லை. அவன் பூர்வீகம் இங்குதான், அவன் அடையாளம் தமிழன் என்பதுதான் என்ற விழிப்புடன் நாம் இருப்போம்.

TOPIC HELP :-http://jayasreesaranathan.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.